
மதுரை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறையின் ஆசிரியர்-மாணவர்கள் இணைந்து மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட சத்திரங்கள் பற்றி பேராசிரியர் சிந்து மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துறைத் தலைவர் முனைவர் உமா, மற்றும் ஆய்வாளர்கள் மதுரை மாவட்டம் மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வு செய்தனர்.
மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அக்கிராமத்தில் உள்ள சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் இக்கல்வெட்டு 4 அடி உயரமும், ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளைக் கொண்டதாகவும் இருந்தது.

இந்த கல்வெட்டில் ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளதோடு கண்மாய் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடைபெறும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்து வறண்ட காலத்தில் புஞ்சை வரி என ஒரே நிலத்திற்கு இரு வகையான வரிகள் இப்பகுதியில் வசூலிக்கப்பட்டு நாயக்க அரசுக்கு இப்பகுதி வரி வசூலிப்பவர் மூலம் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் இந்த கல்வெட்டில் கிடைத்து உள்ளதாகவும், இந்த வரியை வசூலிக்க காசடைய குடும்பத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த கல்வெட்டின் எழுத்தை கொண்டு பார்க்கும்போது இக்கல்வெட்டு 17 ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்துடையது எனவும் தெரிய வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
கண்மாய் கரையில் இருந்த இந்த கல்வெட்டை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் உதவியோடு கல்வெட்டு படிக்கப்பட்டது. மாணவர்கள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலினி, தேவி பிரியதர்ஷன் ஆகியோரோடு மருதங்குடி பகுதியில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EPKLB6Y
via vetrilatesttamilnews
கருத்துகள்
கருத்துரையிடுக